திண்டுக்கல்
கிராம மக்கள் தர்ணா
|வி.குரும்பபட்டியில் உள்ள வலம்புரி வெற்றி விநாயகர் கோவில் கட்டிடத்தை இடித்து அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, வடமதுரை அருகே வி.குரும்பபட்டியில் உள்ள வலம்புரி வெற்றி விநாயகர் கோவில் கட்டிடத்தை இடித்து அகற்ற வேடசந்தூர் தாசில்தார் விஜயலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் நேற்று வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் மற்றும் இந்து முன்னணியினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோவில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டக்காரர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். பின்னர் கோவிலின் முன்பகுதியில் இருந்த (மேற்கூரை) தகர சீட்டுகளை அப்புறப்படுத்தி, கோவிலின் வெளியே இருந்த நவக்கிரகங்கள், காலபைரவர், அனுமன் ஆகிய தெய்வங்களின் சிலைகளை இடித்து அப்புறப்படுத்தினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வடமதுரை வருவாய் ஆய்வாளர் ரஞ்சித், பேரூராட்சி தலைவர் நிருபராணி், செயல் அலுவலர் கல்பனா தேவி ஆகியோர் உடன் இருந்தனர்.
திண்டுக்கல் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன், போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) இமானுவேல் ராஜ்குமார், இன்ஸ்பெக்டர்கள் ஜோதிமுருகன், பாலமுருகன் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.