< Back
மாநில செய்திகள்
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பதாகைகளுடன் வந்த கிராம மக்கள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பதாகைகளுடன் வந்த கிராம மக்கள்

தினத்தந்தி
|
13 March 2023 10:17 PM IST

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்துக்கு, இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பதாதைகளுடன் கிராம மக்கள் வந்தனர்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, திட்ட இயக்குனர் திலகவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத், கலால் உதவி ஆணையர் ஜெயசந்திரகலா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அடிப்படை வசதிகள், உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 240 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் விசாகன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 16 பேருக்கு தொழில் கடன், 50 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செல்போன் என ரூ.6 லட்சத்து 82 ஆயிரத்து 500 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதற்கிடையே திண்டுக்கல் மேற்கு தாலுகா பள்ளப்பட்டியை அடுத்த கொட்டப்பட்டி கிராம பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பதாகைகளை ஏந்தியபடி கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதேபோல் சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோபால்பட்டி இந்திராநகருக்கு தார் சாலை மற்றும் தெருவிளக்கு வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுத்தனர்

மேலும் செய்திகள்