< Back
மாநில செய்திகள்
நிலக்கோட்டை அருகே ரேஷன் கடையை கிராம மக்கள் முற்றுகை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

நிலக்கோட்டை அருகே ரேஷன் கடையை கிராம மக்கள் முற்றுகை

தினத்தந்தி
|
16 May 2023 8:30 PM GMT

நிலக்கோட்டை அருகே ரேஷன் கடையை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

நிலக்கோட்டை அருகே குல்லிசெட்டிபட்டியில் உள்ள ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் தமிழக அரசின் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று காலை அந்த ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக குடும்ப அட்டைதாரர்கள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது ரேஷன் கடை ஊழியர், அந்தியோதயா திட்டத்தின்கீழ் உள்ள 50-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்தியோதயா திட்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் குல்லிசெட்டிபட்டி கிராம மக்கள், முன்னறிவிப்பு இன்றி அந்தியோதயா திட்ட குடும்ப அட்டைகள் தகுதி செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கம்போல் அவர்களுக்கு 35 கிலோ அரிசி வழங்க வலியுறுத்தியும் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த அணைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மதிவாணன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பொதுமக்கள் சமரசம் அடையவில்லை.

அதைத்தொடர்ந்து நிலக்கோட்டை தாசிலார் தனுஷ்கோடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பொதுமக்களிடம் பேசினார். அப்போது, தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 35 கிலோ அரிசி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் குல்லிசெட்டிபட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்