< Back
மாநில செய்திகள்
போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தினத்தந்தி
|
11 Jan 2023 7:00 PM GMT

ெசம்பட்டி அருகே பள்ளி மாணவி காணாமல் போன விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, போலீஸ்நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ்நிலையம் முற்றுகை

செம்பட்டி அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி. இவர், பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 7-ந்தேதி இரவு வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார்.

அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை செம்பட்டி போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து செம்பட்டி போலீஸ்நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

மேலும் அங்கு இருந்த ேபாலீசாருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ்நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தை நடத்தினர். போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது மாணவியின் தாய், மகளை கடத்தி சென்றார்களா? அல்லது கொலை செய்தனரா? என்பது தெரியவில்லை, அவரை கண்டுபிடித்து தரும்படி கூறி கதறி அழுதார். இந்த காட்சி அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.

தள்ளு, முள்ளு

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் போலீஸ்நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையே போலீஸ்நிலையத்துக்குள் யாரும் உள்ளே வரமுடியாதபடி போலீசார் கதவை பூட்டினர். இதனால் கிராம மக்கள் மீண்டும் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் மாணவியை தனிப்படை அமைத்து தேடி வருகிறோம். விரைவில் அவரை கண்டுபிடித்து விடுவோம் என்று இன்ஸ்பெக்டர் கூறினார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் செம்பட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்