திருவள்ளூர்
போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை
|திருவிழாவில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி பிரச்சினை இன்றி நடைபெற உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி வெங்கல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெங்கல்,
எல்லாபுரம் ஒன்றியம், கொமக்கம்பேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலை மணி என்பவர் பல ஆண்டு காலமாக பராமரித்து வருகின்றனர். கோவிலில் நடைபெறும் பூஜைகளில் மணி குடும்பத்தினருக்கு முதல் மரியாதையை கிராம மக்கள் வழங்கி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 22-ம் தேதி இக்கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது அங்கு வந்த ஊராட்சிமன்ற தலைவர் கணவர் தங்கராஜ் எனது குடும்பத்தின் சார்பில் தான் முதல் பூஜையும், எனக்குத்தான் முதல் மரியாதையும் கொடுக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது. பின்னர் தங்கராஜ் குடும்பத்தினர் முதல் பூஜை செய்து மரியாதையைப் பெற்றுக்கொண்டனர். இந்நிலையில், 06-08-2023 அன்று இந்த கோவிலில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு வந்த தங்கராஜ் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியில் எனக்கு தான் முதல் மரியாதை வழங்க வேண்டும் என்றும், கோவில் நிர்வாகத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி பிரச்சினை இன்றி நடைபெற உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி வெங்கல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினர். இதனை அடுத்து கிராம மக்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.