திண்டுக்கல்
நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
|நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்துக்கு சிலுக்குவார்பட்டி கிராம மக்கள் நேற்று திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கிராம மக்கள், தலைமையிடத்து துணை தாசில்தார் தங்கேஸ்வரியை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதில் சிலுக்குவார்பட்டி கிராமத்தில் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு உதவித்தொகையை கிராம நிர்வாக அலுவலகம் மூலம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
மேலும் பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை நேரடியாக பெறமுடியவில்லை. எனவே கிராம நிர்வாக அலுவலரை இடமாற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என கூறியிருந்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட துணை தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.