விழுப்புரம்
மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போராட்டம்
|எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு பகுதியில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போராட்டம்
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு பகுதியில் மணல் குவாரி அமைப்பதற்காக நீர்வளத்துறை மற்றும் சுரங்கவியல் துறை சார்பாக அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்ததோடு பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏனாதிமங்கலம் கிராமத்தில் குவாரி அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் வயல்வெளியில் ஜல்லி கொட்டி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை கண்டித்து நேற்று காலை ஏனாதிமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர் விஜயன், இளைஞர் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா மற்றும் கிராமமக்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்க வேண்டாம், ஏற்கனவே 3 தடவை குவாரி அமைக்கப்பட்டு 30 ஆழத்துக்கு மணல் அள்ளப்பட்டதால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வறட்சி ஏற்பட்டு விவசாயிகள், பொதுமக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டனர். ஏற்கனவே மணல் குவாரி செயல்பட்டதால் 50 ஆண்டு பழமை வாய்ந்த எல்லீஸ் சத்திரம் தடுப்பணை உடைந்து 2 ஆண்டுகளாகியும் இன்னமும் சீரமைக்கப்படவில்லை. மணல் குவாரி அமைத்தால் இந்த பகுதியை சுற்றியுள்ள 120 கிராமங்களின் நீர் ஆதாரமும், விவசாயமும் பாதிக்கப்படும் என கூறி போராட்டம் செய்தனர். மேலும் மணல் குவாரி அமைக்க முயற்சித்தால் அனைத்து ரேஷன் கார்டுகளையும் கலெக்டரிடம் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மணல் குவாரி அமைக்கும் முயற்சியை அரசு கைவிடக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.