காஞ்சிபுரம்
உத்தமர் காந்தி விருது பெற கிராம ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
|உத்தமர் காந்தி விருது பெற கிராம ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிராம ஊராட்சிகளில் வெளிப்படை தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தை வழங்கி, அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு 2022- ம் ஆண்டு முதல் உத்தமர் காந்தி விருது மீண்டும் வழங்கப்படும் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளை விருதுக்கு மதிப்பீடு செய்ய மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மற்றும் அரசு சாரா நிறுவனம் ஆகியோரை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான தேர்வுக்குழு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டரிடமிருந்து பெறப்பட்ட மொத்த கருத்துருக்களில் இருந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தலைமையில், இயக்குநரக அளவில் உள்ள உயர்மட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு பரிசீலனை செய்து 37 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.
மாவட்டத்துக்கு ஒன்று வீதம் அரசால் விருது வழங்கப்படும். இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று அல்லது ஏதேனும் ஒரு சிறப்பு தினத்தில் முதல்-அமைச்சரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
அவ்வாறு பரிசு தொகையை தொடர்புடைய கிராம ஊராட்சிக்கு தேவையான முன்னுரிமைப் பணிகளை, மாவட்ட கலெக்டரின் நிர்வாக அனுமதியுடன் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
எனவே காஞ்சீபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளும் இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் இணையதளமான http://tnrd.tn.gov.in/ என்ற முகவரியில் தேர்வு செய்து கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் முகவரி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழைவு செய்து அறிக்கை எண்.12-ஐ சுட்டி கருத்துரு காரணிகளை தேர்வு செய்து படிவத்தை முறையாக 17-ந்தேதிக்குள் பதிவு செய்திடவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.