< Back
மாநில செய்திகள்
விளாத்திகுளம் அருகே கிராம சபை கூட்டம்; அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

விளாத்திகுளம் அருகே கிராம சபை கூட்டம்; அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

தினத்தந்தி
|
3 Oct 2023 12:15 AM IST

விளாத்திகுளம் அருகே வில்வமரத்துப்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார்.

எட்டயபுரம்:

காந்தி ஜெயந்தியையொட்டி விளாத்திகுளம் அருகே உள்ள வில்வமரத்துப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வில்வமரத்துப்பட்டி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் 15-வது நிதிக்குழுவில் இருந்து 240 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

முதல்-அமைச்சரிடம் தூத்துக்குடி எம்.பி. வைத்த கோரிக்கையின் அடிப்படையில் எச்.சி.எல். நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 44 ஊராட்சிகளையும், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 51 ஊராட்சிகளையும் தத்தெடுத்து, அந்த ஊராட்சிகளுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் விண்ணப்பித்து உரிமைத்தொகை இதுவரை யாருக்கெல்லாம் வரவில்லையோ அவர்கள் வருகின்ற 18-ந்தேதி வரை பிங் கலர் அட்டை, ஆதார் அட்டை, வங்கி புத்தகம் ஆகியவற்றுடன் இ-சேவை மையத்துக்கு சென்று மேல்முறையீடு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. பின்னர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு வேளாண் கருவிகள் மற்றும் இடுபொருட்களையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் அமைச்சர் வழங்கினார்.

தொடர்ந்து அவர் வில்வமரத்துப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் தையல் மையத்தை பார்வையிட்டு, அங்குள்ள பெண்களிடம் கலந்துரையாடினார்.

மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அங்கு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன்ராஜ், துணைத்தலைவர் வேலுச்சாமி, திட்ட இயக்குனர் வீரபுத்திரன், கோவில்பட்டி உதவி கலெக்டர் ஜேன் கிறிஸ்டி பாய், விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பொண்ணு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்