ஈரோடு
துடுப்பதி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: கடந்த மாதம் வரை ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா?100 நாள் வேலை பெண்களிடம் கேட்டறிந்த கலெக்டர்
|துடுப்பதி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 100 நாள் வேலை திட்ட பெண்களிடம் கடந்த மாதம் ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா என்று கலெக்டர் கேட்டு அறிந்து கொண்டார்.
பெருந்துறை
துடுப்பதி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 100 நாள் வேலை திட்ட பெண்களிடம் கடந்த மாதம் ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா என்று கலெக்டர் கேட்டு அறிந்து கொண்டார்.
நடவடிக்கை எடுக்கப்படும்
பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி ஊராட்சியின் வாரச்சந்தை வளாகத்தில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அன்பரசு தலைமை தாங்கினார். பெருந்துறை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தி ஜெயராஜ், துணைத் தலைவர் உமா மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து குறைகளை கேட்டு அறிந்துகொண்டார்.
அப்போது கலெக்டரிடம் அங்கு வந்திருந்த பெண்கள் சிலர், 'நாங்கள் குடியிருக்கும் பகுதியில் சாக்கடை கழிவு நீர் செல்ல வசதி இல்லை. எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும்' என்று கூறினர். மேலும் தெரு விளக்கு வசதி வேண்டும் என்றும், வாரம் ஒரு முறை வருகின்ற குடிநீரை, 2 முறை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து குறைகளை கேட்ட கலெக்டர், அருகில் இருந்த அதிகாரிகளிடம் 'பொதுமக்கள் கூறும் இந்த குறைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்'? என்று கேட்டார். அதற்குப் பதில் அளித்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி 'இவர்களின் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
100 நாட்கள் வேலை திட்ட பெண்கள்
இதனை தொடர்ந்து கலெக்டர் பொதுமக்களிடம் கூறுகையில், 'ஊராட்சி பகுதியில் அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட கழிப்பிடங்களை, பொதுமக்கள் முறையாக பயன்படுத்த வேண்டும் என்றும், திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் 100 நாட்கள் வேலை திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் பெண்களுக்கு கடந்த மாதம் வரை உரிய ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா? என்பதையும் அவர்களிடம் கேட்டார். அதற்கு அந்த பெண்கள், ஜூலை மாதம் வரை ஊதியத்தை பெற்றுக்கொண்டோம் என்று பதிலளித்தனர்.