< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது

தினத்தந்தி
|
29 Aug 2023 7:21 PM GMT

அரக்கோணம் அருகே பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டனர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அரும்பாக்கத்தை சேர்ந்தவர் தசரதன். இவரது அண்ணன் சகாயம் செல்வமந்தையில் நிலம் வாங்கியதாக தெரிகிறது. இந்தநிலையில் சகாயத்திற்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக தசரதன் செல்வமந்தையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சகாயம் வாங்கிய நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக விண்ணப்பித்துள்ளார்.

அதற்கு கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், உதவியாளர் ராஜலிங்கம் ஆகிய இருவரும் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தசரதன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தசரதனிடம் கொடுத்து அனுப்பினர்.

கைது

அதனை தசரதன் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் கிராம உதவியாளர் ராஜலிங்கத்திடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் 2 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு அவர்களை கைது செய்தனர். கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்