சென்னை
இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
|இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் ஜாகிர் உசேன் (வயது 45). இவரிடம் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவர் பாடியநல்லூரில் இறந்துவிட்ட தனது கணவர் முனுசாமி என்பவருக்கு இறப்பு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்திருந்தார்.
இறப்பு சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என ஜாகிர் உசேன் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத உமாமகேஸ்வரி இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
ஜாகிர் உசேனை கையும் களவுமாக பிடிக்கு முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இதற்காக ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை உமாமகேஸ்வரியிடம் கொடுத்து அதனை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர்.
அதன்படி நேற்று திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. செல்வம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலகம் அருகே மறைந்து இருந்தனர்.
அப்போது உமா மகேஸ்வரி, லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனுப்பிய ரூ.5 ஆயிரத்தை கிராம நிர்வாக அலுவலர் கூறியபடி அங்கிருந்த தரகர் மணிகண்டன் என்பவரிடம் கொடுத்தார்.
உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி ஜாகிர் உசேனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.