< Back
மாநில செய்திகள்
பட்டா பெயர் மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பட்டா பெயர் மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

தினத்தந்தி
|
23 Jun 2022 2:29 PM IST

வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கிருஷ்ணராஜகுப்பம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் மணி (வயது 51). இவர் தொடக்கத்தில் தலையாரியாக பணியாற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு பெற்றார். கோரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். விவசாயியான இவர், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரியிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர், தனது தந்தை பெயரில் உள்ள 89 சென்ட் விவசாய நிலத்தை பெயர் மாற்றம் செய்ய பள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஜமாபந்தியில் மனு கொடுத்ததாக தெரிகிறது.


அந்த மனு விசாரணைக்காக கிராம நிர்வாக அலுவலர் மணிக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதற்கிடையே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் தரவேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் மணி விஸ்வநாதனிடம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் தர விருப்பமில்லாத விஸ்வநாதன் இதுகுறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் செய்தார். லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோரின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ.7 ஆயிரத்தை கிராம நிர்வாக அலுவலர் மணியிடம் கொடுக்கும்படி அவர்கள் விஸ்வநாதனை அனுப்பி வைத்தனர். அவர்களின் ஆலோசனைப்படி நேற்று காலை மணியை சந்தித்து விஸ்வநாதன் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை திருவள்ளூர் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்