ராமநாதபுரம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேக விழா
|பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேக விழா நடக்கிறது.
கமுதி,
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயம் அமைந்து உள்ளது. இங்கு தினமும் பூஜைகள், மாதம்தோறும் பவுர்ணமி பூஜைகள், திருவிளக்கு பூஜை, அன்னதானம் போன்றவை நடைபெற்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேவர் நினைவாலய வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணிய சாமி கோவில் கட்டி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தேவர் நினைவாலயத்தில் கடந்த 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு தேவர் குருபூஜையுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. வருகிற 30-ந் தேதி தேவரின் 115-வது ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28-ந் தேதி தேவரின் ஆன்மிக விழா,29-ந் தேதி தேவரின் அரசியல் விழா மற்றும் 30-ந் தேதி குருபூஜை விழா நடைபெற்று வருகின்றன. 28-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் விநாயகர்,சுப்பிரமணியர் கோவில் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான கும்பாபிஷேக ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி தலைமை குருக்கள் சிவாச்சாரியார் பிச்சை குருக்கள் மற்றும் குழுவினர் பசும்பொன் வருகை தந்து யாகசாலை பூஜை செய்யும் பணிகளை பார்வையிட்டு சிவாச்சாரியார்களுக்கு ஆலோசனை வழங்கினார். நாளை 27-ந் தேதி காலை 9 மணிக்கு விக்னேசுவரர் பூஜை உடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு முதலாம் முதல் கால யாக பூஜைகளும், 28-ந்தேதி காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும் காலை 9 மணிக்கு தீபாரதனையும் நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி அளவில் அன்னதானம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், பழனி, தங்கவேல், சத்தியமூர்த்தி உள்பட விழா குழுவினர் செய்து வருகின்றனர்.