ராமநாதபுரம்
கண்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
|ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் கண்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா 2 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் கண்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா 2 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் பட்டணம் காத்தான் கிராமத்தின் சார்பில் ஆண்டுதோறும் கண்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்திவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 26-வது ஆண்டு கிருஷ்ணஜெயந்தி விழா கடந்த 14-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நாளான இன்று (வெள்ளிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு காலை 7 மணி அளவில் பால்குடம் ஊர்வலம் நடைபெறுகிறது.
அப்போது நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் பட்டணம் காத்தான் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கண்ணன் கோவிலை வந்தடைவர். அதனை தொடர்ந்து பாமா, ருக்மணி சமேத கண்ணபிரானுக்கு பாலாபிஷேகம் நடைபெறும். பின்னர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள், அன்னதானம், வானவேடிக்கை மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
சிறப்பு பூஜை
இரவு 12 மணிக்கு கண்ணபிரானுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. விழாவிற்கு முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் தலைமை தாங்குகிறார். மாவட்ட கவுன்சிலர் வக்கீல் ரவிச்சந்திர ராமவன்னி, யாதவர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன் வரவேற்புரை ஆற்றுகிறார்.
விழாவில் பட்டணம்காத்தான் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். விழாவையொட்டி ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கண்ணன் கோவில் வரை அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு கோலாகலமாக காட்சி அளிக்கிறது.
உறியடி திருவிழா
நாளை (சனிக்கிழமை) உறியடி திருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி காலை 7 மணிக்கு பொங்கல் வைபவமும், காலை 10 மணிக்கு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும், பகல் 1 மணிக்கு கண்ணபிரான் அழைப்பு, மாலை 3 மணிக்கு உறியடி உற்சவம் நடைபெறுகிறது. இதில் மணிகண்டன் உறியடிக் கிறார். உறியின் கயிறை ஒன்றிய கவுன்சிலர் முருகன் இழுக்கிறார். தேரோட்டியாக கே.பி.எஸ். டிராக்டர் உரிமையாளர் பாலமுருகன் செயல்படுகிறார்.
அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு கண்ணபிரான் வீதி உலா மற்றும் தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான பூஜைகளை கோவில் அர்ச்சகர் விஜயராகவன் மேற்கொண்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குகிறார்.
ஏற்பாடு
விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், யாதவர் சங்க தலைவர் வடமலையான், செயலாளர் சங்கர், பொருளாளர் ஜெகதீஸ், துணை தலைவர் முருகேசன், துணை செயலாளர் விஜயகுமார், யாதவர் இளைஞர் சங்க தலைவர் பாண்டித் துரை, செயலாளர் மணிகண்டன், பொருளாளர் அரவிந்த், துணை தலைவர் விக்னேசுவரன், துணை செயலாளர் கார்த்திக், சங்க ஒருங்கிணைப்பாளர் கவுதம் மற்றும் யாதவர் சங்கத்தினர், யாதவர் இளைஞர் சங்க நிர்வாகிகள், ஸ்ரீ கிருஷ்ணா மகளிர் சேவை குழுவினர் மற்றும் பட்டணம் காத்தான் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.