விழுப்புரம்
விக்கிரவாண்டி பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை
|விக்கிரவாண்டியில் காதலனை மர்ம நபர்கள் தாக்கி விட்டு பிளஸ்-2 மாணவியை பலத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் திடீர் திருப்பமாக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று மருத்துவ பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது
விக்கிரவாண்டி
மாணவி பலத்காரம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள இரு வெவ்வேறு கிராமங்களை சேர்ந்த 17 வயதுடைய மாணவரும், மாணவியும், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வருகிறார்கள். காதலர்களான இருவரும் கடந்த மாதம் 25-ந் தேதி இரவு விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் ஏரிக்கரை ஓரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மாணவரை கத்தியால் தலையில் குத்தினர். பின்னர் அவர்கள் மாணவியை பலாத்காரம் செய்து விட்டு அவர்களிடம் இருந்த 2 செல்போன்கள் மற்றும் நகைகளை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
7 பிரிவுகளில் வழக்கு
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை பிடிக்க விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள்., 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், மற்றும் இன்ஸ்பெக்டர்கள், 18 சப்-இன்ஸ்பெக்டர்கள், குற்றப்பிரிவு போலீசார் ஆகியோரை கொண்ட 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
மனோதத்துவ மருத்துவர்கள்
மேலும் சம்பவம் நடந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பழைய குற்றவாளிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரணை நடத்தினா். ஆனால் இதுவரை இந்த வழக்கில் எந்தவித துப்பும் துலங்கவில்லை., சம்பவத்தில் தொடா்புடைய மர்ம நபர்களும் பிடிபவில்லை?.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவன், மாணவி இருவரும் போலீசாரிடம் கொடுத்த புகார் உண்மையானதா? என்பதை அறிய மனோதத்துவ மருத்துவர்கள் மூலம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாணவர், மாணவியிடம் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் உண்மை நிகழ்வுகளை தெரிவித்தார்களா? அல்லது பொய்யான தகவல் ஏதேனும் கூறியுள்ளனரா? என அறிய மனோதத்துவ மருத்துவர்கள் குழுவினர் ஹிப்னாடிசம் செய்தனர்.
பலாத்காரம் செய்யப்படவில்லை
இதில் மாணவர், மாணவி இருவரும் சம்பவ இடத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 2 மர்ம நபர்களில் ஒருவன் மாணவியின் செல்போனை பிடிங்கி சேதப்படுத்தி, அவர் அணிந்திருந்த வெள்ளி மோதிரம் மற்றும் கொலுசை பறித்து கொண்டார். பின்னர் மர்ம நபர்கள் இருவரும் சேர்ந்து மாணவரை கத்தியால் கிழித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் என்று கூறியதாகவும், மேலும் மாணவியின் மருத்துவப்பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதியானதும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் டி.என்.ஏ. பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை செய்யபட்டு டாக்டர்களின் மருத்துவ அறிக்கைக்காக போலீசார் காத்திருப்பதாகவும் தெரியவருகிறது.