விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 56 பேரின் வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை
|இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி (வயது 71), கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து காலியாக இருந்த விக்கிரவாண்டி தொகுதியில் அடுத்த மாதம்(ஜூலை) 10-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் கடந்த 21-ந்தேதி ஆகும்.
இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்ளிட்ட 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதாவது பல்வேறு கட்சிகளை சேர்ந்த 16 வேட்பாளர்களும், 40 சுயேச்சைகளும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று(திங்கட்கிழமை), விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகமான விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள்(புதன்கிழமை) கடைசி நாளாகும்.
அன்றைய தினமே வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு, போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியிடப்படுகிறது.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
இவை ஒருபுறம் இருக்க விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள 275 வாக்குச்சாவடி மையங்களில் ஜூலை மாதம் 10-ந்தேதி வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலின்போது 275 வாக்குச்சாவடி மையங்களில் 1,355 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சி 3 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது. இந்த பயிற்சியை தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தொடங்கி வைத்து, தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுவராஜ், தனி தாசில்தார்கள் செந்தில்குமார், வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார்கள் ஆறுமுகம், புருஷோத்தமன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தேர்தல் பறக்கும்படை வாகன சோதனை
அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா?, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழுவினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.