விக்கிரவாண்டி இடைத் தேர்தல்: முன்னேற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை
|விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை,
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர்.அபிநயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில், காணொலி காட்சி வாயிலாக விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரி/மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி சங்கர்லால் குமாவத், இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த், மற்றும் காவல்துறை உதவி தலைவர் (சட்டம் - ஒழுங்கு) என். ஸ்ரீநாத், மற்றும் உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.