< Back
மாநில செய்திகள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமகவின் வெற்றியே தமிழ்நாட்டு மக்களின் வெற்றி - ராமதாஸ்
மாநில செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமகவின் வெற்றியே தமிழ்நாட்டு மக்களின் வெற்றி - ராமதாஸ்

தினத்தந்தி
|
8 July 2024 11:57 AM IST

தமிழ்நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த விக்கிரவாண்டி மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஜனநாயகத்தையும், சமூகநீதியையும் நிலைநிறுத்த விக்கிரவாண்டி மக்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? என்று கேட்டால், ஒரு காரணத்தைக் கூட அக்கட்சியினரால் கூற முடியாது. ஆனால், திமுகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்பது ஆயிரம் காரணங்களை என்னால் பட்டியலிட முடியும். அவற்றில் சிலவற்றை மட்டும் விக்கிரவாண்டி தொகுதி மக்களின் பார்வைக்காகவும், ஆய்வுக்காகவும் இங்கு முன்வைக்க நான் விரும்புகிறேன்.

1. தமிழ்நாட்டில் சட்டம் & ஒழுங்கை பாதுகாக்கத் தவறியது. பட்டியலினத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வெட்டிக் கொல்லப் படும் அளவுக்கு தமிழகத்தில் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலை நிலவுவது.

2. சாதாரண மக்களால் வாழ்க்கை நடத்த முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்தாதது.

3. நியாயவிலைக்கடைகளில் மக்களின் அடிப்படைத் தேவையான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றைக் கூட கடந்த 3 மாதங்களாக வழங்க முடியாத அவல நிலையை ஏற்படுத்தியது.

4. தமிழக அரசுக்கு அதிகாரம் இருந்தும் சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது.

5. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் சமூகநீதி விவகாரத்தில் திமுக செய்த தில்லுமுல்லுகள் அம்பலமாகிவிடும் என்பதற்காக 69% இட ஒதுக்கீட்டையே காவு கொடுக்கத் துணிந்திருப்பது.

6. தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் ஏமாற்றுவது.

7. 2019-ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறி இதுவரை வழங்காமல் ஏமாற்றுவது.

8. தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் மக்கள்தொகை கிட்டத்தட்ட 22% ஆக அதிகரித்துள்ள நிலையில், அதற்கு இணையாக அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க மறுப்பது.

9. விக்கிரவாண்டி தொகுதியில் 3 ஆண்டுகளில் எந்த வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தாதது.

10. விக்கிரவாண்டியில் அரசு கல்லூரி வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாதது.

11. நந்தன் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்தாதது.

12. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 5.50 லட்சம் அரசு வேலைகளை வழங்காதது.

13. தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்குவதற்கான சட்டத்தை கொண்டு வராமல் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகளை வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தாரை வார்ப்பது.

14. அரசு பள்ளிகளில் ஒன்றரை லட்சம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது.

15. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த மறுப்பது.

திமுக அரசின் வேதனைப் பட்டியல் இன்னும் நீண்டது ஆகும். அவற்றை பட்டியலிட பக்கங்கள் போதாது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் வெற்றி, ஜனநாயகத்தின் வெற்றி, சமூகநீதியின் வெற்றி. எனவே, தமிழ் நாடு நலம் பெற, சமூகநீதி தழைக்க நாளை மறுநாள் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் பா.ம.க வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று விக்கிரவாண்டி மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்