< Back
மாநில செய்திகள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகள் பதிவு
மாநில செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகள் பதிவு

தினத்தந்தி
|
10 July 2024 4:11 PM IST

விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் மொத்தம் 13 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணம் அடைந்தார். இதனையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. போட்டியில் இருந்து விலகி கொண்டதால், தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் நிற்கிறார்கள். இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் களத்தில் இருக்கிறார்கள்.

அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், இன்று (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்காக தயார் செய்யப்பட்டுள்ள 276 வாக்குச்சாவடிகளில் 44 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருக்கிறது.

அவர்கள் சிரமமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளும் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சக்கர நாற்காலி, மூத்த குடிமக்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1,355 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 3 மணி நிலவரப்படி 1.5 லட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.

இவர்களில், பெண்கள் அதிக அளவாக 78,949 பேர் வாக்கு பதிவு செய்துள்ளனர். ஆண்கள் 73,781 பேர் வாக்கு பதிவு செய்திருக்கின்றனர். 276 வாக்கு சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்கு பதிவானது நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் சரக போலீஸ் டிஐஜி திஷா மித்தல் தலைமையில் மத்திய துணை ராணுவ படையினர் 220 பேர் உள்பட 2651 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

13-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் மொத்தம் 13 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த இடைத்தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளான ஆண்கள் மற்றும் பெண்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்