< Back
மாநில செய்திகள்
விக்கிரவாண்டியில் இருந்து அழைத்து செல்லப்பட்டவர்களில் 11 பேர் மாயம்:பெங்களூரு ஆசிரமத்தில் நடந்தது என்ன?தனிப்படை போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விக்கிரவாண்டியில் இருந்து அழைத்து செல்லப்பட்டவர்களில் 11 பேர் மாயம்:பெங்களூரு ஆசிரமத்தில் நடந்தது என்ன?தனிப்படை போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

தினத்தந்தி
|
17 Feb 2023 6:45 PM GMT

விக்கிரவாண்டியில் இருந்து அழைத்து செல்லப்பட்டவர்களில் 11 பேர் மாயமாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் பெங்களூரு ஆசிரமத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து தனிப்படை போலீசாரின் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.



விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் என 50 பேர், ஜூபின்பேபியின் நண்பர் ஆட்டோ ராஜாவுக்கு சொந்தமான ஆசிரமம் பெங்களூரு அருகே தொட்டக்குப்பி ஆசிரமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 16 பேர் மாயமாகி விட்டதாக போலீசாரிடம் ஜூபின்பேபி கூறியுள்ளார். ஆனால் பெங்களூரு ஆசிரம நிர்வாகம் இதுகுறித்து எந்தவொரு தகவலையும் தெரிவிக்காமல் மவுனம் காத்தது.

இதையடுத்து செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி தலைமையிலான 5 போலீசார் கொண்ட தனிப்படையினர் நேற்று முன்தினம் காலை பெங்களூருவுக்கு சென்று ஆட்டோ ராஜாவுக்கு சொந்தமான ஆசிரமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த சில ஆவணங்களையும் கைப்பற்றிக்கொண்டு விழுப்புரம் திரும்பினர்.

இதுகுறித்து தனிப்படை போலீசாரின் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுபற்றி காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

11 பேர் தப்பி ஓட்டமா?

பெங்களூருவில் ஜூபின்பேபியின் நண்பர் ஆட்டோ ராஜாவுக்கு சொந்தமான ஆசிரமத்தில் விழுப்புரம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஜூபின்பேபி, கடந்த 6.12.2021 அன்று குண்டலப்புலியூரில் இருந்து 53 பேரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பெங்களூரு ஆசிரமத்தில் விட்டுள்ளார். அதற்கான ஆவணம் ஜூபின்பேபியிடம் உள்ளது. அதுபோல் 53 பேர் பெங்களூரு ஆசிரமத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதான ரசீது ஒன்று ஆட்டோ ராஜாவிடமும் உள்ளது. அதை போலீசாரிடம் அவர் காண்பித்தார்.

விழுப்புரத்தில் இருந்து விட்டுச்சென்ற 53 பேரில் தற்போது பெங்களூரு ஆசிரமத்தில் 20 பேர்தான் உள்ளனர். 20 பேர் குணமடைந்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த ஆசிரமத்தில் கூறுகின்றனர். அதற்கான பதிவேட்டையும் அவர்கள் வைத்துள்ளனர். அந்த பதிவேட்டின்படி உண்மையிலேயே 20 பேரும் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனரா? என்று விசாரணை நடந்து வருகிறது.

மீதமுள்ள 13 பேர் கடந்த 4.3.2022 அன்று அந்த ஆசிரமத்தின் கழிவறை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துவிட்டு அதன் வழியாக தப்பிச்சென்றுள்ளதாகவும், அவர்களில் 2 பேர் திரும்பி வந்துவிட்டதாகவும், மாயமான 11 பேரை தேடி வருவதாக அங்குள்ள ஆசிரமத்தினர் கூறுகின்றனர்.

முறையான அனுமதி உள்ளதா?

ஆனால் அவர்களை பற்றி உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதா? என்று கேட்டதற்கு ஆசிரம நிர்வாகி ஆட்டோ ராஜா, போலீஸ் நிலையத்தில் புகார் ஏதும் கொடுக்கவில்லை, அவர்களை தேடி வருவதாக கூறுகிறார்.

ஏன் போலீசில் புகார் அளிக்கவில்லை என்று கேட்டதற்கு அவரிடமிருந்து உரிய பதில் வரவில்லை. ஆசிரமத்தில் இருந்து 11 பேரும் எவ்வாறு கழிவறை ஜன்னல் கண்ணாடியை உடைத்தனர்?, எந்த வழியை பயன்படுத்தி ஆசிரமத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளனர் என்பது குறித்து வியூகம் வகுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடந்துள்ள முதற்கட்ட விசாரணையின் முடிவில் அங்கிருந்து சில சட்டப்பூர்வமான ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகிறோம்.

மீண்டு்ம் பெங்களூரு செல்ல முடிவு

பெங்களூரு ஆசிரமம் குறித்து இன்னும் முழுமையான விசாரணை முடியவில்லை. எனவே மீண்டும் அங்கு விசாரணை நடத்த இன்னும் சில தினங்களில் பெங்களூருக்கு தனிப்படை போலீசார் செல்ல இருக்கிறார்கள். தற்போது நடத்தியுள்ள முதற்கட்ட விசாரணையில் பெங்களூரு ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர்கள் என 780 பேர் உள்ளனர். அந்த ஆசிரமத்தின் ஒரு பகுதி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனைக்கு உரிய உரிமம் உள்ளது. ஆனால் ஆசிரமம் முறையான அனுமதி பெற்று இயங்குகிறதா என்பது தெரியவில்லை. அதுகுறித்தும் விசாரணை நடத்த உள்ளோம்.

ஆசிரம நிர்வாகியிடம் விசாரிக்க முடிவு

பெங்களூரு ஆசிரம நிர்வாகி ஆட்டோ ராஜாவிடம் அடுத்தக்கட்டமாக விசாரிக்க முடிவு செய்துள்ளோம். அவரிடம் விசாரணை நடத்திய பிறகே 11 பேரும் உண்மையிலேயே ஆசிரமத்தில் இருந்து தப்பிச்சென்றனரா? அல்லது அவர்கள் மாயமானதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா?என்பது விசாரணையின் முடிவிலேயே தெரியவரும். இது சம்பந்தமாக அந்த ஆசிரமத்தில் தங்கியுள்ளவர்களிடமும், அங்கு பணியாற்றி வரும் பணியாளர்களிடமும் விசாரணை நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விசாரணையின் முடிவில் குண்டலப்புலியூர் ஆசிரமத்தைபோல் பெங்களூரு ஆசிரமத்தை பற்றியும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவரலாம் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்