< Back
மாநில செய்திகள்
என்னுடன் சேர்த்து விஜயலட்சுமி, வீரலட்சுமியையும் விசாரிக்க வேண்டும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மனு
மாநில செய்திகள்

'என்னுடன் சேர்த்து விஜயலட்சுமி, வீரலட்சுமியையும் விசாரிக்க வேண்டும்' போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மனு

தினத்தந்தி
|
15 Sept 2023 2:23 AM IST

நான் விசாரணைக்கு வருகிறேன். என்னுடன் சேர்த்து விஜயலட்சுமி, வீரலட்சுமியையும் விசாரிக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மனு அளித்துள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் என்று நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு கடந்த 9-ந்தேதி ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் சீமான் ஆஜராகவில்லை. 12-ந்தேதி அவரது வக்கீல்கள் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை கொடுத்தால்தான் சீமான் ஆஜராகுவார் என்று தெரிவித்தனர்.

சீமானுக்கு மீண்டும் சம்மன்

இந்த நிலையில் சீமானுக்கு நேற்று மீண்டும் வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்மன் அனுப்பினார். இந்த சம்மன் தொடர்பாக சீமான் போலீஸ் கமிஷனருக்கு மனு எழுதினார். இந்த மனுவை நாம் தமிழர் கட்சியின் வக்கீல் பாசறை அணியினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்தனர்.

இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் வழங்கிய அழைப்பாணையை (சம்மன்) பெற்றேன். அதில் நான் போலீஸ் நிலையத்துக்கு நேரில் வந்து விளக்கமளிக்க கோரப்பட்டுள்ளது. நான் நேரில் வருகிறேன். ஆனால் நான் நேர் நிற்கும் போது, என் மீது குற்றம்சாட்டும் விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகிய 2 பேரும் நேர் நிற்க வேண்டும்.

நான் ஒரு பக்கம் விசாரணைக்கு அழைக்கப்படுகிறேன். இன்னொரு பக்கம் அவர்கள் எனக்கு எதிராக தொடர்ச்சியாக காணொலிகளை வெளியிட்டு அவதூறு பரப்பி கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும், அடிப்படையும் இல்லை. ஆனாலும் அவர்கள் 2 பேரும் அதனை தொடர்ந்து பொதுவெளியில் பேசி, எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வேலையை செய்கிறார்கள்.

கட்சி பணிகள், மக்கள் பிரச்சினைகள்

கடந்த முறை அழைப்பாணை கொடுக்கப்பட்ட போது எனது சார்பாக போலீஸ் நிலையத்தில் நேர் நின்ற எனது கட்சியின் வக்கீல் பாசறையை சேர்ந்த குழுவினர் வழக்கு தொடர்பான அடிப்படை விவரங்களை கேட்டனர். அப்போது ஆவணங்களை வழங்க போலீஸ்துறையினர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

கட்சி நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக எனது நிகழ்ச்சி நிரல்களும், பயண திட்டங்களும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் எனக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே ஒரே நாளில் ஒரே சமயத்தில் 3 பேரையும் வைத்து விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை அறிந்துக் கொள்ள கோருகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்