< Back
மாநில செய்திகள்
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்...பட்டி தொட்டி எங்கும் சோக கீதமாக ஒலித்த விஜயகாந்த் பாடல்...!
மாநில செய்திகள்

இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்...பட்டி தொட்டி எங்கும் சோக கீதமாக ஒலித்த விஜயகாந்த் பாடல்...!

தினத்தந்தி
|
28 Dec 2023 7:16 PM IST

ஏழைகள் வாழ நீ செய்த யாகம்... என்னென்ன என்று எங்கே சொல்வேன்.

சென்னை,

கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை 6 மணிக்கு உயிரிழந்தார். இதனையடுத்து விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்பட்ட விஜயகாந்தின் உடல், பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகிற்கு இந்த நாள் மிகவும் சோகமானதாக அமைந்துள்ளது. கோலிவுட்டில் ரஜினி, கமல் உச்சத்தில் இருந்த போது, அவர்களுக்கு நிகராக எல்லா விதங்களிலும் மாஸ் காட்டியவர் விஜயகாந்த். ஆக்ஷன் சீன்களில் விஜயகாந்தின் பைட்களை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர். அந்தளவுக்கு சண்டைக் காட்சிகளில் மற்ற ஹீரோக்களுக்கு சவால் விடுத்தவர் கேப்டன்.

இந்நிலையில், கடந்த சில வருடங்களாக நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்த விஜயகாந்த், அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தினார். பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வில் இருந்தார். அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விஜயகாந்த், இன்று காலை உயிரிழந்தார். கேப்டன் விஜயகாந்தின் மறைவு திரையுலகையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காலை முதலே கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்கள் கட்டுங்கடங்காமல் திரண்டு வருகின்றனர்.

பிரபலங்களும் தங்களது இரங்கல்களை ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் வழியாக தெரிவித்து வருகின்றனர். அதோடு விஜயகாந்தின் சில பாடல்களும் சோக கீதங்களாக ஒலித்து வருகின்றன. அதில் முக்கியமாக பூந்தோட்ட காவல்காரன் படத்தில் இடம்பெற்ற இளையராஜா குரலில் பாடல், கேப்டனின் மறைவுக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. 1988ம் ஆண்டு வெளியான பூந்தோட்ட காவல்காரன் படத்தில் விஜயகாந்த் ஜோடியாக ராதிகா நடித்திருந்தார்.

இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் விஜயகாந்த் உயிரிழந்த பின்னர் சோகமாக ஒலிக்கும். அப்போது பாடல் வரிகளும் ரசிகர்களின் நெஞ்சை உறைய வைக்கும். "ஏழைகள் வாழ நீ செய்த யாகம்... என்னென்ன என்று எங்கே சொல்வேன்... அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ... நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்.. இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்... அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்க்கத்தில்... மன்னவன் காவிய நாயகனே... என்னுயிர் தேசத்து காவலனே..." என்ற இந்தப் பாடல் தான் தற்போது சோக கீதமாக ரசிகர்களை கலங்கடித்து வருகிறது.

அதேபோல், சின்ன கவுண்டர் படத்தில் வரும் 'அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவனே' என்ற பாடலையும் ரசிகர்கள் விஜயகாந்த் போட்டோவுடன் எடிட் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

மேலும் அவர் தொடர்பான வீடியோ காட்சிகளை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

அவர் நடித்த ரமணா படத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகளை எல்லாம் கொலை செய்துவிட்டு ஜெயிலில் இருக்கும் விஜயகாந்தை பார்க்க, முதல்-அமைச்சராக இருக்கும் ரவிச்சந்திரன் செல்வார். அப்போது விஜயகாந்திடம், 'எவ்வளவு பெரிய விஷயம் பண்ணிருக்க. உன்னை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு. ஒரு மனுஷன் பிரியும் போது ஒரு தாய் அழுதா அவன் நல்ல மகன், பிள்ளைங்க அழுதா அவன் நல்ல தகப்பன், அவன் கூட பொறந்தவங்க அழுதா நல்ல சகோதரன்.. அவன் பிரிவுக்காக நாடே அழுதா அவன் நல்ல தலைவன்.. உனக்காக இந்த நாடே அழுவுதப்பா" என ரவிச்சந்திரன் சொல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

நீங்கள் மறைந்தாலும் உங்கள் பேச்சுக்கள், படங்கள், பாடல்கள் மூலம் என்றும் மக்கள் மனதில் வாழுவீங்க கேப்டன் என கண்கலங்கியபடி ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்