சென்னை தீவுத் திடலுக்கு மாற்றப்பட்ட விஜயகாந்தின் இறுதி அஞ்சலி...!
|காலை முதலே கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்கள் கட்டுங்கடங்காமல் திரண்டு வருகின்றனர்.
சென்னை,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் (வயது71) உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவரது உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து காவலர்கள் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக கேப்டன் விஜயகாந்த் உடல் வைக்கபட்டுள்ளது.
இந்நிலையில் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்தின் மறைவு திரையுலகையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காலை முதலே கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்கள் கட்டுங்கடங்காமல் திரண்டு வருகின்றனர். அவரது இறுதி சடங்கு நாளை மாலை 4.45 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜயகாந்தின் இறுதி அஞ்சலியானது சென்னை தீவுத்திடலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக காலை முதலே ஆலோசனை செய்து வந்த நிலையில் தற்போது இறுதி அஞ்சலி நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை அதிகாலை 4 மணியளவில் விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் இருந்து தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. பின்னர் நாளை காலை 6 மணி முதல் தீவுத்திடலில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.