சென்னையில் ரேஷன் கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.60க்கு விற்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு
|சென்னையில் ரேஷன் கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.60க்கு விற்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் ரேஷன் கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.60க்கு விற்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஒரு வாரமாக சென்னையில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. பசுமை பண்ணை கடைகளில் தக்காளியை குறைந்த விலைக்கு தமிழக அரசு விற்பனை செய்து வருகிறது. அதேபோல் ரேஷன் கடைகளிலும் தக்காளியை குறைந்த விலைக்கு விற்க தேமுதிக சார்பில் அறிக்கை வாயிலாக வலியுறுத்தி இருந்தேன்.
எனது அறிக்கைக்கு செவி சாய்த்து தற்போது சென்னையில் மட்டும் 82 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.
அதேசமயம் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளியை குறைந்த விலைக்கு விற்க வேண்டும். தக்காளியின் பற்றாக்குறையை போக்கி அதன் விலையை குறைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.