5 படங்களில் எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த் - சரத்குமார் பேட்டி
|விஜயகாந்த் மறைந்தபோது வெளிநாட்டில் இருந்ததால் உடனடியாக வர முடியவில்லை என சரத்குமார் தெரிவித்தார்.
சென்னை,
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். பின்னர் அடுத்த நாள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்தில் இன்று அவரது நெருங்கிய நண்பரும், சமக தலைவருமான நடிகர் சரத்குமார் அஞ்சலி செலுத்தினார். பின் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் கூறியதாவது, 'விஜயகாந்த் மறைந்தபோது வெளிநாட்டில் இருந்ததால் உடனடியாக வர முடியவில்லை. விஜயகாந்த் முழுமையாக குணமடைந்து மீண்டு வருவார் என நம்பியிருந்தோம். விஜயகாந்த் மறைந்த தினத்தை கறுப்பு நாளாகவே நான் கருதுகிறேன். தொடர்ந்து 5 படங்களில் எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த், ஒரு கதாநாயகனாக தனக்கு போட்டியாக வந்துவிடுவேனோ என்ற எண்ணம் இல்லாமல் அவர் தயாரிக்கும் படங்களில் என்னை நடிக்க வைத்தார். விஜயகாந்தின் சிறந்த பண்புகள், குணாதிசயங்களை நாம் பின்பற்ற வேண்டும்.' என்றார்.
அதன்பிறகு சாலி கிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று அவரது உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு, பிரேமலதா உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.