< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்

கோவில், பள்ளிகளில் விஜயதசமி விழா; அரிசியில் எழுதி பழகிய குழந்தைகள்

தினத்தந்தி
|
25 Oct 2023 3:00 AM IST

தேனி மாவட்டத்தில் கோவில்கள், பள்ளிகளில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் அரிசியில் எழுதி பழக பெற்றோர்கள் கற்றுக்கொடுத்தனர்.

தேனி மாவட்டத்தில் கோவில்கள், பள்ளிகளில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் அரிசியில் எழுதி பழக பெற்றோர்கள் கற்றுக்கொடுத்தனர்.

விஜயதசமி விழா

விஜயதசமி நாளில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதும், அவர்களுக்கு எழுத கற்றுக்கொடுப்பதும் வழக்கமாக உள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்கள், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் நேற்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.

கோவில்களில் நடந்த விழாவுக்கு, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்தனர். கோவில் வளாகத்தில் அமர்ந்து, மஞ்சள் தடவிய அரிசி மற்றும் நெல்லில் 'அ'கரம் உள்ளிட்ட எழுத்துகளையும், கடவுள் பெயர், குழந்தைகளின் பெயர்களையும் குழந்தைகளின் கை விரல் பிடித்து பெற்றோர்கள் எழுத சொல்லிக்கொடுத்தனர்.

அதன்படி, தேனி பெத்தாட்சி விநாயகர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி, தங்களது குழந்தைகளுக்கு அரிசியில் எழுத கற்றுக்கொடுத்தனர்.

பள்ளிகள்

இதேபோல் மாவட்டம் முழுவதும் ஏராளமான மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் விஜயதசமியையொட்டி நேற்று மழலையர் வகுப்புகளுக்கு மாணவ-மாணவிகள் சேர்க்கை நடந்தது. மேலும் பள்ளிகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து குழந்தைகளுக்கு அரிசியில் 'அ'கரம் உள்ளிட்ட எழுத்துகளை எழுத சொல்லிக்கொடுத்தனர். ஏராளமான பெற்றோர் இந்த நாளில் தங்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டினர்.

பெரியகுளத்தில் உள்ள கவுமாரியம்மன் கோவிலில் விஜயதசமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். இதேபோல் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்தார்.

மேலும் செய்திகள்