மதுரை
கள்ளழகர் கோவிலில் விஜயதசமி விழா
|கள்ளழகர் கோவிலில் விஜயதசமி விழா
அழகர்கோவில்
மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் விஜயதசமி விழா நேற்று மாலையில் நடந்தது. இதில் குதிரை வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் இருந்து புறப்பாடானது. பின்னர் மேளதாளம் முழங்க, தீவட்டி, வர்ணக்குடை, பரிவாரங்களுடன் பெருமாள் புறப்பாடாகி ஆடி வீதிகள் வழியாக சென்றது. தொடர்ந்து பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவில், தெற்கு கோட்டை வாசல் வழியாக சென்று அங்குள்ள அம்பு விடும் மண்டபம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து வன்னி மரத்தடியில் பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க பெருமாளுக்கு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் அசுரனை வதை செய்யும் வகையில் பெருமாள் அம்பு விடும் நிகழ்வு நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்து சாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து அதே பரிவாரங்களுடன் சுவாமி வந்த வழியாகவே சென்று கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேர்ந்தது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.