புதுக்கோட்டை
தியேட்டரில் மோதிரம் மாற்றி காதலியை கரம் பிடித்த விஜய் ரசிகர்
|புதுக்கோட்டையில், லியோ திரைப்படம் வெளியான தியேட்டரில் மோதிரம் மாற்றி காதலியை விஜய் ரசிகர் கரம் பிடித்தார். அவர்களுக்கு படம் பார்க்க வந்திருந்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
விஜய் ரசிகர்கள்
புதுக்கோட்டை அய்யர்குளத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 32). அதே ஊரை சேர்ந்தவர் மஞ்சுளா (31). உறவினர்களான இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் விஜய் ரசிகர்கள் ஆவார்கள்.
இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் புதுக்கோட்டையில், இன்று (வெள்ளிக்கிழமை) நடக்க உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் விஜய் ரசிகர்கள் என்பதால் நடிகர் விஜய் முன்னிலையில் திருமணம் நடக்க வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் விருப்பமாக இருந்து வந்தது.
லியோ திரைப்படம்
இந்நிலையில், நடிகர் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது. இதில் புதுக்கோட்டையில் 3 திரையரங்குகளில் லியோ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. திரையிடப்பட்ட முதல் நாளில் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பேண்டு வாத்தியம் முழங்க, விசில் அடித்து கூச்சலிட்டு ஆரவாரம் செய்தும் கொண்டாடினர். இந்நிலையில் புதுக்கோட்டை மேல ராஜ வீதியில் உள்ள விஜய் தியேட்டரில் லியோ திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.
திரையரங்கில்...
அப்போது வெங்கடேஷ்-மஞ்சுளாவின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றும் விதமாக நேற்று லியோ திரைப்படம் வெளியான திரையரங்கிற்கு அவர்களை ரசிகர்கள் வரவழைத்தனர். பின்னர் ரசிகர்கள் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போது விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பர்வேஸ் மற்றும் ரசிகர்களின் முன்னிலையில் வெங்கடேஷ்-மஞ்சுளா இருவரும் மாலை மாற்றி, மோதிரத்தை அணிந்து கொள்ள செய்தார். அப்போது ரசிகர்கள் கைத்தட்டியும், விசில் அடித்தும், கூச்சலிட்டும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் மோதிரம் மாற்றிக்கொண்ட அவர்களுக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மோதிரம் மாற்றிக் கொண்டோம்
இதுகுறித்து வெங்கடேஷ்-மஞ்சுளா கூறுகையில், பெற்றோர் சம்மதத்துடன் முறைப்படி இருவரின் திருமணம் நாளை (அதாவது இன்று) நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று எங்களின் நீண்டநாள் ஆசையான விஜய் முன்னிலையில் திருமணம் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது திரைப்படம் முன்பு மாலை மாற்றி மோதிரம் அணிவித்துக் கொண்ட நிகழ்வு எங்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. விஜய் திரையில் வந்தாலும் அவர் எங்கள் முன்னால் வந்ததாக நினைத்து அவர் முன் மோதிரம் மாற்றிக் கொண்டோம். மேலும் நடிகர் விஜய் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டோம், என்றார்.