திருவள்ளூர்
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் நடமாட்டத்தை கண்டறிய தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் தீவிர வாகன சோதனை - போலீசார் 'உஷார்' நடவடிக்கை
|தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் நடமாட்டத்தை கண்டறிய தமிழக, ஆந்திர எல்லைப் பகுதியில் போலீசார் ‘உஷார்’ நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, உள்பட 15 மாநிலங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் இயக்கங்கள் குறித்து என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு அமைப்பு) அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 93 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளில் 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தமிழகத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும், நகரின் முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில், திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பொன்பாடி சோதனை சாவடியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களை தீவிர சோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதித்தனர். இதேபோல் திருத்தணி முருகன் மலைக்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் திருத்தணி அண்ணா பஸ் நிலையம், ரெயில் நிலையம், மற்றும் முக்கிய சாலை பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உஷார் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.