நாமக்கல்
நாமக்கல்லில் பரபரப்பு:சப்-இன்ஸ்பெக்டர் வீடு உள்பட 3 இடங்களில் அதிரடி சோதனை
|நாமக்கல்லில் சப்-இன்ஸ்பெக்டர் வீடு உள்பட 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
நாமக்கல்லில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீடு உள்பட 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
நாமக்கல் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பூபதி (வயது 42). இவர் நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள திருநகர் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் நேற்று காலை 6 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி, இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த அதிரடி சோதனையின் போது வீட்டில் இருந்து யாரையும் போலீசார் வெளியே அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ள கணினி மற்றும் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய இந்த சோதனை மாலை 6 மணி வரை நீடித்தது.
பணம் மோசடி
இதேபோல் மல்லசமுத்திரம் ஒன்றியம் கீழ்முகம் கிராமம் ஜவஹர் வீதியில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பூபதியின் தந்தை தங்கவேலுக்கு சொந்தமான வீட்டிலும், வெண்ணந்தூர் அருகே கல்கட்டானூர் பகுதியில் வசித்து வரும் பூபதியின் மாமனார் செங்கோடன் என்கிற சுப்ரமணி வீட்டிலும் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இங்கும் காலை தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது.
சப்-இன்ஸ்பெக்டர் பூபதி கடந்த 2018-ம் ஆண்டில் ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றினார். அப்போது பச்சுடையாம்பாளையத்தை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் ஜெயராஜன் என்பவரிடம் திண்டுக்கல்லை சேர்ந்த அட்ரின் போஸ்கோ என்பவர் ஜெயராஜனின் மகன் சக்திவேலுக்கு வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் அவருடைய அண்ணன் மகன் வெற்றிவேலுக்கு வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் பெற்று கொண்டு மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல் ஜெயராஜன் பங்குதாரராக உள்ள நிதி நிறுவனத்தில், அட்ரின் போஸ்கோ 2 கார்களின் ஆவணங்களை அடகு வைத்து ரூ.10 லட்சம் பெற்றதாகவும், அவரது மனைவி பெயரில் உள்ள நில ஆவணத்தை வைத்து ரூ.3 லட்சம் வாங்கியதாகவும் தெரிகிறது.
ரூ.2 லட்சம் லஞ்சம்
எனவே அட்ரின் போஸ்கோவிடம் இருந்து வரவேண்டிய சுமார் ரூ.30 லட்சம் பணத்தை திரும்ப பெற்று தரவேண்டும் என ஜெயராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பூபதியிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு அவர் ஜெயராஜனிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டு உள்ளார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த ஜெயராஜன் முதற்கட்டமாக ரூ.2 லட்சம் கொடுத்தார். இருப்பினும் அட்ரின் போஸ்கோவிடம் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் பூபதி பணத்தை பெற்று கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததுடன், அட்ரின் போஸ்கோவிடமும் பணம் பெற்று கொண்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மீது வழக்குப்பதிவு செய்து நேற்று அவருடைய வீட்டிலும், உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பரபரப்பு
இதேபோல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மீது லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மேலும் சில புகார்கள் வந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அது தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலை வாங்கி தருவதாக கூறி நிதி நிறுவன அதிபரிடம் பணத்தை ஏமாற்றிய நபரிடம் இருந்து, அந்த தொகையை மீட்க சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.