< Back
மாநில செய்திகள்
விடிய, விடிய மது விற்பனை: டாஸ்மாக் கடைகள், பார்களில் போலீசார் திடீர் சோதனை - 41 பேர் கைது
சென்னை
மாநில செய்திகள்

விடிய, விடிய மது விற்பனை: 'டாஸ்மாக்' கடைகள், பார்களில் போலீசார் திடீர் சோதனை - 41 பேர் கைது

தினத்தந்தி
|
12 Jun 2022 9:17 AM IST

அரசு நிர்ணயித்த நேரத்தை காட்டிலும் கூடுதலாக ‘டாஸ்மாக்’ கடைகள், பார்களில் மது விற்பனை செய்த 41 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் 'டாஸ்மாக்' கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்குகிறது.

ஆனால் சென்னையில் உள்ள பெரும்பாலான 'டாஸ்மாக்' கடைகள், பார்களில் இரவு 10 மணிக்கு மேல் புறவாசல் வழியாக கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.

இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 'டாஸ்மாக்' கடைகள், பார்களில் போலீசார் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று காலை வரையில் விடிய, விடிய திடீர் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில், 'டாஸ்மாக்' கடைகள் மற்றும் இதர பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 41 பேர் சிக்கினர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 581 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த விவகாரத்தில் பார் உரிமையாளர்கள், டாஸ்மாக் ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

சென்னையில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்