< Back
மாநில செய்திகள்
போலீசாரை அவதூறாக பேசியவிடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் இடைநீக்கம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

போலீசாரை அவதூறாக பேசியவிடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் இடைநீக்கம்

தினத்தந்தி
|
30 Jan 2023 11:24 PM IST

ஆரணியில் போலீசாரை அவதூறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் 3 மாதம் கட்சி பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆரணி

ஆரணியில் போலீசாரை அவதூறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் 3 மாதம் கட்சி பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவதூறாக பேசினார்

ஆரணி நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் பகலவன் என்கிற பாஸ்கரன், ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது போலீசாரை ஒருமையிலும், சாதிப்பெயரை சொல்லியும் அவதூறாக பேசியது சமூக வலைதளங்களில் பரவியது.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் பகலவன் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகிய இருவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

50 பேர் மீது வழக்கு

அவர்கள் கடந்த 26-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தனர். அவர்களுக்கு கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் திறந்த காரில் பாஸ்கரனுக்கு ராஜ கிரீடங்கள் அணிவித்தும், ஆள் உயர மாலைகளை அணிவித்தும், டவுன் போலீஸ் நிலையம் முன்பு, காக்கி சட்டையே வா என போலீசாரை அவதூறாக பேசியபடி, நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர். இது சமுக வலைதளங்களில் பரவியது.

இதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஆரணி டவுன் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உள்பட 50 பேர் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பாஸ்கரை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

இடைநீக்கம்

நேற்று முன்தினம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். தனிப்படை போலீசார் தொடர்ந்து மற்றவர்களை தேடி வந்த நிலையில் நேற்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில் காவல்துறையினரை அவதூறாக பேசிய திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் பகலவன் என்கிற பாஸ்கரனை 3 மாதம் கட்சி பொறுப்பிலிருந்து இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக கட்சி மேலிட நிர்வாகிகள் விசாரணை நடத்தவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்