தமிழக போலீஸ் துறைக்கு ஜனாதிபதி கொடி: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று வழங்குகிறார்
|முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடைபெறும் விழாவில் தமிழக போலீஸ் துறைக்கு ஜனாதிபதி கொடியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்குகிறார்.
சென்னை:
தமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்படுகிறது. இதுபோன்ற சிறப்பு கொடி இந்தியாவில் இதுவரை 10 மாநில போலீசாருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம் தமிழகம் தான்.
தமிழக போலீஸ் துறைக்கு கவுரவமிக்க ஜனாதிபதியின் கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் நடைபெறுகிறது.
விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து வாழ்த்தி பேசுகிறார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்டு ஜனாதிபதியின் கொடியை தமிழக போலீஸ்துறைக்கு வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வரவேற்று பேசுகிறார். சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நன்றி கூறுகிறார்.
போக்குவரத்து மாற்றம்
இந்த விழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
- ருக்குமணி லட்சுமிபதி சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருபவர்களின் வாகனங்களை தவிர பிற வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
- பாந்தியன் சாலையில் இருந்து ருக்குமணி லட்சுமிபதி சாலை வழியாக 'எஸ்கார்ட் பாயிண்ட் ' செல்ல வேண்டிய வாகனங்கள் பாந்தியன் சாலை ரவுண்டானாவில் இருந்து பாந்தியன் மேம்பாலம் வழியாக சென்று கோ-ஆப்டெக்ஸ் பாயிண்ட் வழியாக அவர்கள் செல்ல வேண்டிய பகுதிகளை அடையலாம்.
- எத்திராஜ் சாலை ருக்குமணி லட்சுமிபதி சாலை சந்திப்பில் இருந்து பாந்தியன் ரவுண்ட்டான நோக்கி செல்ல வேண்டிய வாகனங்கள் கோ-ஆப்டெக்ஸ் பாயிண்ட் வழியாக பாந்தியன் சாலையை அடையலாம்.
- பாந்தியன் சாலை மாண்டியத் சாலை சந்திப்பில் இருந்து ருக்குமணி லட்சுமிபதி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் மியூசியம் அருகில் உள்ள பாந்தியன் சாலை வழியாக கோ-ஆப்டெக்ஸ் அல்லது பாந்தியன் ரவுண்டானாவுக்கு சென்று தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.