< Back
மாநில செய்திகள்
இடிந்து விழும் அபாயத்தில் கால்நடை மருத்துவமனை கட்டிடம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் கால்நடை மருத்துவமனை கட்டிடம்

தினத்தந்தி
|
19 July 2023 1:00 AM IST

இடையக்கோட்டை அருகே இடிந்து விழும் அபாயத்தில் கால்நடை மருத்துவமனை கட்டிடம் உள்ளது.

கால்நடை மருத்துவமனை

ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை அருகே, மார்க்கம்பட்டியில் அரசு கால்நடை கிளை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மார்க்கம்பட்டி, எல்லைப்பட்டி, மாம்பாறை, அய்யம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது வீடுகளில் வளர்த்து வரும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கால்நடை மருத்துவமனை சுமார் 50 ஆண்டு கால பழமையான கட்டிடத்தில் இயங்குகிறது. ஓடுகளால் வேயப்பட்ட மேற்கூரை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் ஒழுகி மருந்துகள் சேதம் அடைந்து வருகிறது.

கட்டிட சுவர் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. மேலும் அங்கு எந்தவொரு அடிப்படை வசதியும் கிடையாது.

வாரத்தில் 3 நாட்கள் மட்டும்...

கால்நடை மருத்துவமனைக்கு என்று தனியாக டாக்டர் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக சின்னக்காம்பட்டி கால்நடை மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டரே கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். வாரத்தின் 3 நாட்கள் (செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை) மட்டுமே மருத்துவமனை செயல்படுகிறது. மற்ற நாட்களில் மருத்துவமனை பூட்டி கிடக்கிறது. எனவே கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயத்துக்கு அடுத்தப்படியாக அந்த பகுதியில் கால்நடை வளர்ப்பு தொழிலில் அதிகம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அங்கு தினமும் டாக்டர்கள் வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு, அதனை இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்