தென்காசி
கால்நடை மருத்துவ முகாம்
|ஊத்துமலையில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை கிராமத்தில், தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மூலம் தமிழக முதல்வரின் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நெல்லை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் மருத்துவர் ஜான்சுபாஷ் தலைமை தாங்கினார். தென்காசி கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் மகேஸ்வரி வரவேற்றார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, சிறந்த கிடாரி கன்று வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
ஊத்துமலை ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி அய்யனார், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் முரளிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் நெட்டூர் கால்நடை மருத்துவர் ராமசெல்வம் தலைமையில் மருத்துவ குழுவினர் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் போட்டனர். மேலும் சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், மடிவீக்க நோய் சிகிச்சை, ஆடுகள், கிடாரி கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டது. ஊத்துமலை கால்நடை மருத்துவர் ரமேஷ் நன்றி கூறினார்.
தொடர்ந்து கால்நடை மருத்துவமனையை பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அவரிடம் தென்காசி, பாவூர்சத்திரம் கால்நடை மருந்தகங்களை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்தவும், தென்காசிக்கு புதிய மண்டல இணை இயக்குனரை நியமிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. முகாமில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பால்ராஜ் மற்றும் கால்நடை வளர்க்கும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.