< Back
மாநில செய்திகள்
மருத்துவர்களுக்கு இணையாக கால்நடை மருத்துவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் - ராமதாஸ்
மாநில செய்திகள்

மருத்துவர்களுக்கு இணையாக கால்நடை மருத்துவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் - ராமதாஸ்

தினத்தந்தி
|
24 Jun 2024 10:56 AM IST

மருத்துவத்துறை மருத்துவர்களுக்கும், பல் மருத்துவர்களுக்கும் வழங்கப்படும் பதவி உயர்வை கால்நடை மருத்துவர்களுக்கும் வழங்குவது தான் சமூக நீதி என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

"தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறையில் பணியாற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கால்நடை பராமரிப்புத்துறை பரிந்துரை வழங்கியும் அதை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது. ஒரே நிலையிலான கல்வித் தகுதி கொண்டவர்களுக்கு சம ஊதியம், சம பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற இயற்கை நீதிக்கு எதிரான தமிழக அரசின் இந்த நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது ஆகும்.

கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை உதவி மருத்துவர்களாக சேருபவர்களுக்கு, மருத்துவத்துறையில் பணியாற்றும் உதவி மருத்துவர்களுக்கு இணையான தொடக்க நிலை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், பணியில் சேர்ந்த 8 ஆண்டுகளில் உதவி மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் நிலையில் கால்நடை உதவி மருத்துவர்களுக்கு அவ்வாறு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. அவர்கள் பணியில் சேர்ந்து 24 ஆண்டுகளுக்கு பிறகு தான் உதவி இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதனால், பணியில் சேர்ந்து 24 ஆண்டுகளை நிறைவு செய்ய முடியாத கால்நடை உதவி மருத்துவர்கள் எந்த நிலையில் பணியில் சேர்ந்தார்களோ, அதே நிலையில் பணி ஓய்வு பெற வேண்டியுள்ளது. இது பெரும் அநீதி ஆகும்.

மருத்துவத்துறை மருத்துவர்களை போலவே தங்களுக்கும் காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் அடிப்படையில் பணியில் சேர்ந்த 8, 16, 24 ஆகிய ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணை கடந்த ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அந்த ஆணை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனாலும், அதில் சில திருத்தங்களை செய்து செயல்படுத்தலாம் என்று தமிழக அரசுக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன் கால்நடை பராமரிப்புத்துறை பரிந்துரை வழங்கியது. ஆனால், எந்த காரணமும் இல்லாமல் அந்த பரிந்துரையை தமிழக அரசின் நிதித்துறை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.

கால்நடை மருத்துவர்களுக்கு காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்குவதை தடுப்பதற்காக தமிழக அரசின் சார்பில் கூறப்படும் காரணங்கள் நியாயமற்றவை. அரசு மருத்துவர்களுக்கு இணையாக தங்களுக்கும் காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று பல் மருத்துவர்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டு அவர்களுக்கு 8, 15, 17 மற்றும் 20-ம் ஆண்டுகளில் நான்கு முறை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், கால்நடை மருத்துவர்களுக்கு 24 ஆண்டுகளில் 3 முறை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட நிறைவேற்ற தமிழக அரசு மறுப்பது நியாயமல்ல.

தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்காக உழைப்பவர்களில் கால்நடை மருத்துவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். மருத்துவத்துறை மருத்துவர்களுக்கும், பல் மருத்துவர்களுக்கும் வழங்கப்படும் பதவி உயர்வை கால்நடை மருத்துவர்களுக்கும் வழங்குவது தான் சமூக நீதி. அதை மதித்து கால்நடை மருத்துவர்களுக்கான பதவி உயர்வு தொடர்பான கால்நடை பராமரிப்புத் துறையின் பரிந்துரையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்