புதுக்கோட்டை
கால்நடை மருத்துவரிடம் 6 பவுன் நகை நூதன திருட்டு
|விராலிமலையில் கால்நடை மருத்துவரிடம் 6 பவுன் நகையை நூதன முறையில் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கால்நடை மருத்துவர்
விராலிமலை காமராஜர் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 70). ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர். இவர், நேற்று புதிய பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர், உங்களை சோதனை செய்ய வேண்டும் நில்லுங்கள் என்று கூறி வழி மறித்துள்ளனர். அப்போது அவர்கள் வயதான காலத்தில் ஏன் கழுத்தில் இந்த தங்க நகையை அணிந்து கொண்டு தனியாக செல்கிறீர்கள் என்று கூறியுள்ளனர்.
பின்னர் சங்கிலியை கழட்டி பையில் வைத்து செல்லுங்கள் எனக்கூறி நகையை கழற்றி தரும்படி மர்மநபர்கள் கூறியுள்ளனர். இருவரும் அரசு அதிகாரிகள் என நினைத்து தான் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் 1 பவுன் மோதிரம் ஆகியவற்றை அவர் கழற்றி கொடுத்துள்ளார்.
நூதன திருட்டு
இதையடுத்து 6 பவுன் நகையையும் மர்ம நபர்கள் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் தான் அவர்கள் தன்னை ஏமாற்றி நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கால்நடை மருத்துவரிடம் 6 பவுன் நகையை நூதன முறையில் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.