< Back
மாநில செய்திகள்
முன்னாள் படைவீரர்கள் நலத்திட்டங்களை மத்திய அரசின் பட்டியலில் சேர்க்க வேண்டும்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

முன்னாள் படைவீரர்கள் நலத்திட்டங்களை மத்திய அரசின் பட்டியலில் சேர்க்க வேண்டும்

தினத்தந்தி
|
23 May 2022 2:03 AM IST

முன்னாள் படைவீரர்கள் நலத்திட்டங்களை மத்திய அரசின் பட்டியலில் சேர்க்க வேண்டும்

தஞ்சாவூர்:

முன்னாள் படைவீரர்கள் நலத்திட்டங்களை மத்திய அரசின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

முன்னாள் படைவீரர்கள் சங்கம்

தஞ்சை மாவட்ட முன்னாள் படைவீரர் சங்க 43-வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேஜர் பாபு தலைமை தாங்கினார். பிரிகேடியர் இந்தர் மோகன்சிங் கலந்து கொண்டு பேசினார். கர்னல் அரசு கலந்து கொண்டு முன்னாள் படைவீரர்கள் கொடியை ஏற்றி வைத்தார்.

கூட்டத்தில் டாக்டர்கள் மீனாட்சிசுந்தரம், செந்தில்குமார், அசோக், தஞ்சை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலர் ஞானசேகர், முன்னாள் படைவீரர் ஆஸ்பத்திரி அதிகாரி மனோகரன், புதுச்சேரி மோகன், தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேஜர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். சுபேதார் மணிவண்ணன், பாஸ்கரன் ஆகியோர் அறிக்கை சமர்பித்தார்.

இலவச கண் மருத்துவ முகாம்

முன்னதாக மறைந்த முன்னாள் படைவீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடந்த இலவச கண் பரிசோதனை முகாமை கர்னல் ஜெயராஜ் தொடங்கி வைத்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கூட்டத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான நல திட்டங்களை மத்திய அரசின் பட்டியலில் சேர்க்க வேண்டும், இதற்கு நிதி ஒதுக்க வேண்டும், இந்திய மாநிலங்களில் வழங்கப்படும் பல்வேறு வகையான உதவிகள், மானியங்கள் படைவீரர்களுக்கு வழங்கப்படுவதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். மத்திய, மாநில அரசின் இட ஒதுக்கீடுக்கான சதவீதத்தை அதிகரித்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.

கூடுதல் இட ஒதுக்கீடு

முன்னாள் படை வீரர்களுக்கான ஆணையம் அமைக்க வேண்டும். ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்களுக்கு 62 வயது வரை மத்திய, மாநில அரசு வேலை நீட்டிக்கப்பட வேண்டும். முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு ஒருமுறை இந்தியாவில் பயணிக்க இலவச பயண சீட்டு வழங்க வேண்டும். முன்னாள் படைவீரர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் தொழில்கல்வியில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். முடிவில் மேஜர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். அதைத்தொடர்ந்து மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கருத்தரங்கமும் நடைபெற்றது. தென்னக பண்பாட்டு மையம் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

மேலும் செய்திகள்