< Back
மாநில செய்திகள்
பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி - முத்தரசன்
மாநில செய்திகள்

பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி - முத்தரசன்

தினத்தந்தி
|
13 Feb 2023 1:57 PM IST

பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என கூறியுள்ளார்.

ஈரோடு,

ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது.

ஒன்றிய அரசின் 2023-24 நிதி நிலை அறிக்கை கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனை காப்பதற்கான அறிக்கை. ஏழை, எளிய மக்களுக்கு எதிரான அறிக்கை. 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எம்.பி. சுப்புராயனும், நானும் பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். மகாத்மா காந்தி திட்டத்திற்கு நிதி குறைப்பை கண்டித்து வரும் மார்ச் மாதம் 7-ந் தேதி அனைத்து இடங்களிலும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெறும். தொடர்ந்து டெல்லியிலும் போராட்டம் நடத்தப்படும் சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் மீண்டும் போடப்படுவதாக இருந்தால் எதிர்ப்போம்.

இல்லாததை சொல்லி எடப்பாடி பழனிசாமி பிரச்சினைகளை திசை திருப்ப முயல்கிறார். தி.மு.க.வில் உள்ள தோழமை கட்சிகளும், இடது சாரி கட்சிகளும் தி.மு.க. செய்யும் தவறுகளை சுட்டி காட்டவில்லை. வாய்மூடி மவுனியாக இருப்பதாக எடப்பாடி சொல்கிறார். அவர் முதல்வராக பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அவரும், அவருடைய கட்சியும் வாய்மூடி மவுனியாகத்தான் இருக்கிறது.

பா.ஜ.க.வின் கொத்தடிமையிலும், கொத்தடிமையாக அ.தி.மு.க. மற்றும் எடப்பாடி இருக்கிறார். வேட்பாளரையே பா.ஜ.க.வை கேட்டு தான் முடிவு செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாகி இருக்கிறது.இப்படிப்பட்டவர் எங்களை பற்றி விமர்சிக்க உரிமை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்