கடலூர்
மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணி
|நெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணியை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
நெல்லிக்குப்பம்,
விண்ணப்பங்கள் சரிபார்ப்பு
கடலூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் பெற 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம் மற்றும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்த திட்டத்தில் பயன்பெற மொத்தம் 6 லட்சத்து 8 ஆயிரத்து 862 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இதையடுத்து கள ஆய்வு செய்து அரசு விதித்துள்ள விதிமுறைப்படி, தகுதியானவர்களின் பட்டியலை தயார் செய்யும் வகையில் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நெல்லிக்குப்பம் பகுதியில் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகைதிட்ட விண்ணப்பங்களை கள ஆய்வு செய்து அதில் அளிக்கப்பட்ட விவரங்களை சரிபார்த்தனர்.
ஆய்வு
இந்த பணியை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த விண்ணப்பதாரர்களிடம் ரேஷன் கார்டுகளை வாங்கி சரிபார்த்தார். பின்னர் குடும்ப வருமானம் எவ்வளவு, கார், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளதா என கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகளின் பெயர்கள் விடுபடாமல் கவனமாக பணியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன், தாசில்தார் ஆனந்தி, வருவாய் ஆய்வாளர் அன்வர் தீன் உள்பட பலர் உடன் இருந்தனர்.