மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்த வழக்குகளில் நாளை தீர்ப்பு
|அமலாக்கத்துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
சென்னை,
தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிகளவு மணல் அள்ளி விற்பனை செய்யப்பட்டதாகவும், மணல் குவாரி ஒப்பந்தத்தில் வந்த வருமானம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்த நிலையில், விசாரணைக்காக ஆஜர் ஆகும்படி திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், '" கனிம வள குற்றங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, அமலக்காத்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. சட்ட விரோத மணல் குவாரி தொடர்பாக விசாரணை நடத்துவது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. அமலாக்கத்துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. பாஜக ஆளும் மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அமலாக்கத்துறை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக செயல்படுகிறது. மணல் கொள்ளை பற்றி விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை. மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டுப்பெறலாம். விசாரணைக்கு உதவும்படி கோரலாம். சம்மன் அனுப்ப முடியாது " என்று வாதிட்டார்.
இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரூ.4,500 கோடி சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு உதவியாகத்தான் ஆவணங்கள் கேட்கப்பட்டது. முதல் தகவல் அறிக்கைகளை சமர்ப்பிக்க கேட்டும் டிஜிபி கொடுக்கவில்லை. அவற்றை வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் விசாரணைக்கு உதவி செய்ய கேட்பதற்கும், சம்மன் அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது. அனைத்து குவாரிகளின் விவரங்களை எப்படி கேட்க முடியும்? என கேள்வி எழுப்பினர். இதையடுத்து இவ்வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் தெரிவித்தனர்.