சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு
|பார்முலா 4 கார் பந்தயத்தை தமிழ்நாடு அரசு நடத்துகிறது.
சென்னை,
சென்னை தீவுத்திடலைச் சுற்றியுள்ள வட்ட வடிவ சாலை மார்க்கத்தில் வருகிற 9, 10-ந்தேதிகளில் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது. இந்த கார் பந்தயத்தை தமிழ்நாடு அரசு நடத்துகிறது. இதற்காக ரூ.40 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த கார் பந்தயத்தினால் பொது போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும். அதனால், இந்த பந்தயத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ஸ்ரீ ஹரிஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, இந்த பந்தயத்துக்காக பல்வேறு துறைகளிடமிருந்து பெறப்பட்ட முன்அனுமதிக்கான ஆவணங்களை தாக்கல் செய்தனர்.
பின்னர், "இந்த கார் பந்தயம் வருகிற 9, 10-ந்தேதிகளில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே நடத்தப்படும். இதற்காக அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் முறையாக பின்பற்றப்படும். இதுகுறித்து ராணுவம், கடற்படை, துறைமுக அதிகாரிகளுடன் ஏற்கனவே கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது'' என்றும் கூறினர்.உடனே மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் நர்மதா சம்பத், இந்த கார் பந்தயத்துக்கு ராணுவம், துறைமுகம், கடற்படை ஆகியவற்றின் அனுமதி அவசியம். ஆனால், இதுவரை அந்த அனுமதியை அரசு பெறவில்லை'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த பந்தயத்துக்கு ராணுவம், துறைமுகம், கடற்படையிடம் பெறப்பட்ட எழுத்துப்பூர்வமான அனுமதியை அரசு தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்படும் என்று உத்தரவிட்டனர்.