< Back
மாநில செய்திகள்
வேப்பிலை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
திருச்சி
மாநில செய்திகள்

வேப்பிலை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

தினத்தந்தி
|
24 April 2023 2:49 AM IST

வேப்பிலை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.

மணப்பாறை:

மணப்பாறை நகரின் மையப் பகுதியில் புகழ்பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை முதல் நாளில் திருவிளக்கு பூஜை நடைபெற்ற நிலையில், நேற்று பூச்சொரிதில் விழா நடைபெற்றது. நேற்று காலை கோவிலில் கணபதி ஹோமம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையடுத்து மாலையில் இருந்து ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் பூத்தட்டுகளை கோவிலுக்கு சுமந்து சென்று வேப்பிலை மாரியம்மனை வழிபட்டனர். இதேபோல் மணப்பாறை நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் அலங்கரிக்கப்பட்டு, மின்னொளியில் ஜொலித்த சப்பரங்களில் அம்மனை வைத்து சிறப்பு வழிபாடு செய்து, முக்கிய வீதிகளின் வழியாக பஸ் நிலையம் முன்புள்ள முனியப்பன் கோவிலை வந்தடைந்தனர். அனைத்து சப்பரங்களும் வந்த பின்னர் வரிசையாக மாரியம்மன் கோவிலை நோக்கி சென்றன. அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால் தெருவெங்கும் விழாக்கோலம் பூண்டிருந்தது. முன்னதாக நேற்று இரவு மழை கொட்டித்தீர்த்தது. இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, கோவில் செயல் அலுவலர் வைரவன் ஆகியோர் தலைமையில் முக்கியஸ்தர்கள், விழாக் குழுவினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

திருவிழாவின் தொடர்ச்சியாக வருகிற 30-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பால்குட விழா அடுத்த மாதம் 14-ந் தேதியும், வேடுபரி திருவிழா, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 15-ந் தேதியும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்