சென்னை
எழும்பூரில் துணிகரம்: பெண் போலீசை தாக்கி தங்க சங்கிலி பறிப்பு - கொள்ளையர்கள் கைது
|எழும்பூரில் பெண் போலீசை தாக்கி தங்க சங்கிலி பறித்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பெண் போலீசாக பணியாற்றுபவர் பிரியா (வயது 25). இவர் அதே பகுதியில் வசிக்கிறார். கடந்த மாதம் 18-ந் தேதி அன்று பிரியா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்கு எழும்பூரில் உள்ள மருந்து கடைக்கு சென்று மாத்திரை வாங்கினார். பின்னர் ஸ்கூட்டரில் புதுப்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். எழும்பூர் கமிஷனர் அலுவலக சாலையில் வந்து கொண்டிருந்த போது, ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வழிமறித்தனர். அவர்கள் பெண் போலீஸ் பிரியாவை தாக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மின்னல் வேகத்தில் பறித்து சென்று விட்டனர்.
இது தொடர்பாக பிரியா, எழும்பூர் போலீசில் புகார் கொடுத்தார். உடனடியாக போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் கொள்ளையர்கள் மூவரும் அடையாளம் காணப்பட்டனர். சென்னை வியாசர்பாடியைச்சேர்ந்த கொள்ளையர்கள் முகமது முஸ்தபா (20), அப்துல் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இன்னொரு கொள்ளையன் ஸ்பீடு அஜித் என்பவரை தேடி வருகிறார்கள். இவர்கள் மீது ஏற்னவே தங்க சங்கிலி பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன.