தேனி
தேவாரம் அருகே பட்டப்பகலில் துணிகரம்:விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 லட்சம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
|தேவாரம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேவாரம் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் நடராஜன். விவசாயி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது 62). இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். நடராஜன் இறந்து விட்டதால் ஈஸ்வரி தனியாக வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் தென்னந்தோப்பு உள்ளது. தினமும் காலையில் ஈஸ்வரி அந்த தோட்டத்திற்கு சென்று வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்புவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டிவிட்டு அவர் தோட்டத்துக்கு சென்றார்.
பின்னர் மாலையில் திரும்பி வந்தபோது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் பதற்றம் அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த பணம் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேவாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.
தேனியில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி அங்குள்ள முக்கிய வீதிகள் வழியாக ஓடி பஸ் நிறுத்த பகுதிக்கு சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. போலீசார் விசாரணை நடத்தியதில், ஆள் வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பட்டப்பகலில் வீடு புகுந்து பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.25 லட்சத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிந்து பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.