< Back
மாநில செய்திகள்
வெங்கடேஷ் பண்ணையார்நினைவுதினம்:தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

வெங்கடேஷ் பண்ணையார்நினைவுதினம்:தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு

தினத்தந்தி
|
23 Sept 2023 12:15 AM IST

வெங்கடேஷ் பண்ணையார்நினைவுதினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையார் நினைவுதினத்தை முன்னிட்டு நாளைமறுநாள்(திங்கட்கிழமை) முதல் வருகிற 27-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தடை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரம் கிராமத்தில் வருகிற 26-ந் தேதி அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை சார்பில் மூலக்கரை என்.வெங்கடேஷ் பண்ணையாரின் 20-வது நினைவுதினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி நிகழ்ச்சி அமைதியாக நடைபெறும் வகையிலும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையிலும் வருகிற 25-ந் தேதி மாலை 6 மணி முதல் 27-ந் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

விழாவில் கலந்து கொள்ள வரும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு, வேல்கம்பு, கற்கள் மற்றும் இதர அபாயகரமான, ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும விழாவில் கலந்து கொள்ள பொதுமக்களை அழைத்து வருவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு

இந்த தடை உத்தரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவுக்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றுக்கு பொருந்தாது.

வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தினம் அமைதியான முறையில் அனுசரிக்க மாவட்ட போலீஸ் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த இருந்தால், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு பொருந்தாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்