< Back
மாநில செய்திகள்
வெங்கலம் மகா முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வெங்கலம் மகா முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
30 April 2023 7:21 PM GMT

வெங்கலம் மகா முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வெங்கலம் கிராமத்தில் உள்ள மகா முத்து மாரியம்மன் கோவிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டு, அதன் வெள்ளோட்டம் கடந்த 24-ந் தேதி நடந்தது. அதனை தொடர்ந்து 25-ந்தேதி செல்லியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பொங்கல், மாவிளக்கு வைத்து வழிபாடு நடத்தப்பட்டு, அம்மன் வீதி உலா நடந்தது. 26-ந்தேதி கூத்தாண்டவருக்கு பொங்கல், மாவிளக்கு வைத்து வழிபாடு நடந்தது. 27-ந்தேதி உற்சவ முத்து மாரியம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா வந்ததை தொடர்ந்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. 28-ந்தேதி காலை பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற அம்மனுக்கு பால்குடம், அக்னி சட்டி எடுத்து வந்தும், அலகு குத்தி வந்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மதியம் முத்து மாரியம்மன் குடியழைப்பு நடந்ததை தொடர்ந்து, பொங்கல், மாவிளக்கு வைத்து வழிபாடு நடத்தப்பட்டு, அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு முன்பு சிறப்பு அலங்காரத்தில் உற்சவ முத்து மாரியம்மனை அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்தனர். காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேரினை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பியவாறு தேரை இழுத்து சென்றனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் வெங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் மஞ்சள் நீராட்டுடன் தேர் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினரும், வெங்கலம் கிராம மக்களும் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்