< Back
மாநில செய்திகள்
வேங்கைவயல் விவகாரம்: 3 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை
மாநில செய்திகள்

வேங்கைவயல் விவகாரம்: 3 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை

தினத்தந்தி
|
8 May 2024 2:12 PM IST

சென்னை மயிலாப்பூர் தடய அறிவியல் துறை அலுவலகத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான சாட்சியங்களை சமர்ப்பிக்க வேண்டி உள்ளதால், சம்பவம் நடந்தபோது வாட்ஸ்அப்-ல் பகிரப்பட்ட ஆடியோக்களின் அடிப்படையில், குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்.

இது தொடர்பாக 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோர்ட்டில் ஆஜரான 3 பேருக்கும் குரல் மாதிரி பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இன்று சென்னை மயிலாப்பூர் தடய அறிவியல் துறை அலுவலகத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடைபெற்றது. குரல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் 3 பேரையும் பாதுகாப்புடன் ஆய்வகத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களை வெவ்வேறு விதமாகவும், சம்பந்தப்பட்ட குற்ற சம்பவத்தில் அவர் பேசியதாக கூறப்படும் பகுதியை எழுதிக்கொடுத்தும் பேசச்சொல்லி குரல் மாதிரி பதிவு செய்யப்பட்டது.

இந்த குரல் மாதிரிகள், ஏற்கனவே பெறப்பட்டுள்ள வாட்ஸ்அப் உரையாடல்கள், செல்போன் தகவல்களுடன் ஒப்பிடப்படும். அந்த சோதனை குரலின் அதிர்வின் அளவு, குரல் ஏற்ற இறக்கங்கள் அளவிடப்படும். குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆய்வு செய்யப்பட்ட குரல் மாதிரியின் முடிவுகள் கோர்ட்டில் நேரடியாக தடய அறிவியல் துறை மூலம் அளிக்கப்படும்.

மேலும் செய்திகள்