வேங்கைவயல் விவகாரம்: 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி
|வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 21 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேங்கைவயல், இறையூர் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 4 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெயந்தி முன்பு கடந்த 14-ந்தேதி மீண்டும் வந்தது. சிறுவர்கள் 4 பேரும், அவர்களது பெற்றோரும் கோர்ட்டில் ஆஜராகியிருந்தனர். சிறுவர்கள் தரப்பில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து மனு மீதான விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுவர்கள் 4 பேருக்கும் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி அளித்து புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் பரிசோதனை தேதியை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் குழு முடிவெடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.